அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சூடானில் உள்நாட்டுச் சண்டை 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், முக்கிய நகரங்களைவிட்டு இந்தியர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துடன் துணை ராணுவ படையை இணைக்கும் திட்டத்திற்கு துணை ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் துணை ராணுவம் அறிவித்துள்ளது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமூக முடிவு ஏற்படவில்லை.
இந்தத் தொடர் தாக்குதலால் முக்கிய நகரங்களில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்கின்றனர். இதனால் இந்தியர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் வீடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் இந்திய தூதரகத்தின் உதவியை நாடி எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்திய தூதரகமும் இந்தியர்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படியும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அத்தியவாசியப் பொருட்களான உணவு, தண்ணீர் உள்ளிட்டவை இல்லாமல் இருக்கும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கர்தூம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிக்கி தவித்து வருவதாக இந்தியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியர்கள் வீடுகளை விட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், வெளியே செல்லும் சூடானியர்களின் செல்போன் உள்ளிட்டவற்றை ராணுவம் மற்றும் துணை ராணுவ குழுக்கள் பறித்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து அதில் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்குச் சிக்கி உள்ள இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவுகூட ராணுவம், துணை ராணுவம் இடையே சண்டை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரு தரப்பும் ஆங்காங்கே குழுக்களாக சண்டையிட்டு வருவதால் சூடானில் பதற்றமான நிலையே நீடித்து வருகிறது.