இந்திய வம்சாவளியான ராதாவின் பெயர் பென்டகன் துணைச்செயலாளர் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் துணைச்செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வானார். இந்த உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதா ஐயங்கார் பிளம்ப் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் ராதா ஐயங்கார் பிளம்ப். நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் - ல் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
மேலும் கூகுள், ஃபேஸ் புக் போன்ற முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். அதன் பின் இவருக்கு அமெரிக்காவின் அரசு பணி கிடைத்துள்ளது. எரிசக்தி துறை மற்றும் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் போன்றவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
பின் அமெரிக்க ராணுவ துணை அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய வம்சாவளியான ராதாவின் பெயர் பென்டகன் துணைச்செயலாளர் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் ராதா ஐயங்கார் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ள நிலையில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட மற்றொரு பெண் அந்நாட்டின் முக்கிய பதவிக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னணி நிறுவனங்களிலும், உலக நாடுகளின் உயர் பதவிகளிலும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பதவி வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.