விமானி ருடால்ப் எராஸ்மஸை, தென்னாப்பிரிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை கொண்டாடியது
11,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது, பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடி பயணிகளின் ரத்ததையும் உறையவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பீச்கிராப்ட் பேரோன் 58 என்ற ஒரு தனியார் விமானம் உள்ளது. இந்த விமானம், ப்ளூம்ஃபோன்டைனில் இருந்து பிரிட்டோரியா நோக்கி, தனது மதிப்புக்குரிய பயணிகளுடன் 11,000 அடி உயரத்தில் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானி ருடால்ப் எராஸ்மஸ் கண்ணில் ஒரு மிரட்சி தென்பட்டது. காரணம், விமானியின் இருக்கைக்கு அடியில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று, விஸ்வரூப தரிசனத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்த விமானி ருடால்ப் எராஸ்மஸ், விமானத்தை அவசரமாகத் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக, தனது அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, மேல் உத்தரவுகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார்.
விமானத்தில் இருந்த பாம்பு கோப்ரா வகைப் பாம்பு என்பதும், அந்தப் பாம்பு கடித்தால் வெறும் 30 நிமிடங்களில் மரணம் நிச்சயம் என்பதும் தென் ஆப்ரிக்காவில் உள்ள சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், என்ன செய்வது, விதி வலியது என்பது விமானிக்கு அப்போதுதன் புரிந்தது.
விமானத்தில் பாம்பு உள்ளது எனப் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டால், பீதி ஏற்படுமா? எனத் தனது மனதிற்குள்ளே ஆலோசனை செய்த விமானி, நிறைவில் பயணிகளிடம் இந்தத் தகவலை சொல்லிவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
'விமானத்தின் உள்ளே பாம்பு இருக்கு. அது என் இருக்கைக்குக் கீழேதான் இருக்கு. அதனால், நீங்க யாரும் பயப்படாதீங்க. விமானத்தை விரைவில் தரை இறக்கிவிடலாம். அங்கு உங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்' என பயணிகளுக்கு நம்பிக்கை விதையை விதைத்தார்.
ஆனால், 'விமானத்தில் எதிர்பாராத சூழல்கள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பயிற்சிகள் உண்டு. ஆனால் விமானத்தில் பாம்பு இருந்தால் அதனை எப்படிப் பிடிப்பது? என்ற பயிற்சியை யாரும் சொல்லித்தரவில்லையே' என்று மனதிற்குள் சொல்லி வேதனையைக் கொட்டித்தீர்த்தார் விமானி.
ஆனால், மறுபக்கம் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. விமானத்தில் இருந்து வெளியே குதிக்க முடியாது என்பதாலும், உள்ளேயே இருந்தால் பாம்பு கொத்திவிடுமோ என்றும் பீதியில் உறைந்த பயணிகள், ஒரு கணம் மரணத்தின் வாசலை மித்ததுபோல் கனவு கண்டு மீண்டு வந்தனர்.
அப்போது, விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து பேசிய இரு ஊழியர்கள், 'விமானத்தின் அடியில் பாம்பு புகுந்தது எங்களுக்கு முன்பே தெரியும். அதனைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால், முடியவில்லை' எனக் கூலாகப் பதில் சொல்லி, கேட்டவர்களை உஷ்ணப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தான், விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியது, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றியது என்ற செயல்களுக்காக, சிறந்த விமானி` என்று ருடால்ப் எராஸ்மஸை, தென்னாப்பிரிக்கச் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை கொண்டாடியது. பாராட்டு மழை பொழிந்துவிட்டது.
நடுவானில் பாம்புவிடம் இருந்து பயணிகளைப் பத்திரமாகக் காப்பாற்றிய விமானி ருடால்ப் எராஸ்மஸ் உண்மையிலே ஒரு ஹீரோதான் என்று அந்நாட்டு மக்களும் போற்றுகின்றனர். 11,000 அடி உயரத்தில் ஒரு ஹீரோ உருவாகியுள்ளார் என்பதை நினைக்கும்போது, விமானியின் துணிச்சல் அனைத்திற்கும் ஒரு மகுடமாக திழ்கிறது என்பது நிஜம்.
- கே.என்.வடிவேல்