அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்ததோடு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு இருந்தனர். இதற்கிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புடன் தனக்கு இருந்த உறவு குறித்து புத்தகம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து இருந்தார். ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் ட்ரம்புக்கும், ஆபாச பட நடிகையுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல்கள் வெளியாகி வைரலானதால் டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டது. இந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ள நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் டொனால்ட் டிரம்ப் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா கூறினார். இவ்வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோர்ட்டில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அதிபர் என்பதால் விலங்கு மாட்டப்படவில்லை. டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.