டுவிட்டர் லோகோவாக நீலநிற குருவிக்கு பதில் நாயின் படத்தை எலான் மஸ்க் வைத்துள்ளார்
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டரை விலைக்கு வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பல டுவிட்டர் கணக்குகளை எலான் மஸ்க் தடை செய்தார். மேலும் ஆள் குறைப்பு, வேலை நேரம் அதிகரிப்பு, முக்கிய அதிகாரிகள் மாற்றம் என, பல மாற்றங்கள் செய்த எலான் மஸ்க் திடீரென டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சியை அதிரடியாக நீக்கினார்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டதோடு சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-ஷர்ட் மற்றும் கண்ணாடி அணிந்து அந்த நாய் ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையையும், கேலியையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது புதிய மாற்றம் ஒன்றை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதாவது, டுவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றியுள்ளார். அதாவது வழக்கமாக இருந்து வந்த நீல நிற குருவிக்கு பதிலாக நாய் படத்தை லோகோவாக மாற்றி இருக்கிறார்.
இந்த நாய் ஜப்பானின் முக்கிய நாய் இனமான ‘ஷிபா இனு’ என கூறப்படுகிறது. இதன் புகைப்படத்தை வைத்து Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளதாக லோகோ மாற்றத்துக்கு எலான் மஸ்க் விளக்கம் கொடுத்துள்ளார். டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.