புதிய அணு ஆயுத சோதனையின் மூலம் செயற்கை சுனாமியை ஏற்படுத்தியதாக வடகொரியா அறிவித்துள்ளது
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி வருவதால் அதை எதிர்கொள்ள தென்கொரியாவுக்கு பக்க பலமாக அமெரிக்கா இருந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையிலும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடகொரியா நாட்டின் அரசு ஊடகம் கே.சி.என்.ஏ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட ஆயுதம் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து வெடித்து சிதறியது.
இதன் மூலம் செயற்கை சுனாமியை ஏற்படுத்தினோம். தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இந்த சோதனை நடந்தது. இந்த அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக அமைந்ததில் தலைவர் கிம் ஜாங் உன் மகிழ்ச்சி அடைந்தார்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த அணு ஆயுதச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் புதிய அணு ஆயுதச் சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து தென்கொரியா நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் கூறும்போது, ‘வடகொரியாவின் இத்தகைய ஆத்திரமூட்டும் செயலுக்கு நிச்சயம் உரிய விலையை கொடுக்க நேரிடும்’ என, கூறி உள்ளார்.