நாய்களின் உடல்கள் சாக்குகளிலும், ரப்பர் பெட்டிகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன
தென்கொரியா நாட்டில், 1000 நாய்களைக் கூண்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, நாய்களைச் செல்லப்பிராணியாக வீடுகளில் வளர்த்து வருகிறோம். அனைவரும் நாய்களை வீட்டில் உள்ள தங்களுடைய பிள்ளைகளைப் போலவே பார்க்கின்றனர். நாய்கள் வீட்டைப் பாதுகாத்து காவலாளியாகவே இருக்கிறது. மனிதர்கள் மீது நாய்கள் வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. தெருவில் உள்ள நாய்களுக்குக் கூட சிலர் உணவு வைத்துச் செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய நாய்களைப் பட்டினி போட்டு கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா நாட்டில் முதியவர் ஒருவர் 1000 நாய்களைப் பட்டினி போட்டு கொடூரமான முறையில் கொன்றுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரித்த போது, நாய்களை எடுத்துச் சென்று பட்டினி போட்டுக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தென்கொரியா காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
2020ஆம் ஆண்டு முதல் இனப்பெருக்க வயதைக் கடந்த மற்றும் வணிக ரீதியாகக் கவர்ச்சிகரமாக இல்லாத நாய்களை எடுத்துச் செல்வதற்காக நாய் வளர்ப்பாளர்கள் அந்த முதியவருக்குப் பணம் கொடுத்துள்ளனர். நாய்களைக் கவனித்துக் கொள்வதற்காக நாய் ஒன்றுக்கு 10,000 வோன் (தென்கொரியா பணம்) முதியவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, அந்த முதியவர் நாய்களை அடைத்து வைத்து பட்டினி போட்டுக் கொன்றுள்ளார்.
தென் கொரியாவின் வடமேற்கே அமைந்த கியாங்கி மாகாணத்தில் யாங்பியாங் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயைக் காணவில்லை என வீடு, வீடாகச் சென்று தேடிச் சென்ற போது நாய்களை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்து அதிர்ந்துள்ளார். இதனையடுத்து, இந்தத் தகவல், விலங்குகள் உரிமைக் குழு ஆர்வலர்களுக்குச் சென்றது.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தரையில் ஒரு தளம் உருவாகும் அளவிற்கு நாய்கள் கொல்லப்பட்டு நிறைந்து கிடந்துள்ளன. இரண்டாவது தளம் நிறையும் அளவிற்கு மீதமுள்ள நாய்களின் சிதைந்த உடல்கள் கிடந்துள்ளன.
மேலும், நாய்களின் உடல்கள் சாக்குகளிலும், ரப்பர் பெட்டிகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து உள்ளூர் நிர்வாகம் தரப்பு கூறுகையில், இறந்த நாய்களின் உடல்கள் முழுவதும் இந்த வாரத்தில் அகற்றப்படும் என்றும், நான்கு நாய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது என்றும் கூறினர்.
தென்கொரியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளது. அங்கு, விலங்குகளுக்கு உணவு அளிக்காமலிருந்தாலோ, கொலை செய்தாலோ மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் அல்லது 30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும்.
இதை எல்லாம் பார்க்கும் போது, விலங்குகளைத் துன்புறுத்தும் போக்கு குறைய வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.