புதிய தொழில்நுட்பம் வருங்காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
காருக்கான மாதத்தவணையை கட்டத்தவறினால் இனி கார் இயங்காதப்படி செய்யும் தொழில்நுட்பத்திற்காக அனுமதிக்கோரி ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மனிதனின் அன்றாட வாழ்க்கையில் வாகனங்களின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. அதிலும் கார் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பெரும்பாலோர் கார்களை குறிப்பிட்ட தொகை கொடுத்தும் மீதி பணத்தை மாதத்தவணையில் செலுத்தும் வகையில் வாங்குகின்றனர். அப்படி இருக்கையில், தாங்கள் வாங்கும் காருக்கு (இஎம்ஐ) மாதத்தவணையை கட்டத்தவறினால் இனி கார்கள் இயங்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த அனுமதிக்கோரி காப்புரிமைக்காக அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதன்மூலம் வாகனங்களை வாங்கப் பணம் கொடுக்கும் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காரின் கண்ணாடிகளை மூடிவைக்க முடியும். காரின் ஏசியை செயல்படாமல் வைக்க முடியும். மேலும் ஜிபிஎஸ் கருவிகளை முடக்க முடியும். காரின் இன்ஜின் செயல்படாமல் இருக்கவும், காரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.
இதனால் மாதத்தவணையில் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மாதத்தவணையை கட்டத்தவறினால் தொடர்ந்து கார்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய காப்புரிமைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த புதிய தொழில்நுட்பம் வருங்காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.