நினைவு நாள் இன்று; உயிரோடு பூமிக்கு திரும்பமாட்டார்கள்... முன்பே தெரிந்த கல்பனா சாவ்லாவின் மரணம்

நினைவு நாள் இன்று; உயிரோடு பூமிக்கு திரும்பமாட்டார்கள்... முன்பே தெரிந்த கல்பனா சாவ்லாவின் மரணம்

விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரி கல்பனா சாவ்லா. விண்வெளி மங்கையான இவரின் நினைவு தினம் தான், பிப்ரவரி 1 வரலாற்றில் இன்று.

ஹரியானா மாநிலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த கல்பனா சாவ்லா-விற்கு விண்ணிற்கு செல்வது கனவாக இருந்தது. இதற்காக விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டு, முதல் இந்திய விண்வெளி மங்கையாக 1997-ல் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இப்படி தனது விமான பயணத்தில் வெற்றி மங்கையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா, தனது விண்வெளி பயணத்தில் உயிரிழந்தது எப்படி?

தெரிந்துக்கொள்ள காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி 2003 ம் ஆண்டிற்கு திருப்புவோம். 2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் விண்கலத்தில் பயணித்தனர். 

இந்த விண்கலம், 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். 

விண்கலம் வெடித்தது எப்படி?

கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பிய போது சிதறி விழுந்த ஒரு சிறிய ஃபோம் துண்டுதான் காரணம்.  இந்த விண்கலம் புறப்படும் போது விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தின் மீது விழுந்த அந்த ஃபோம் துண்டு பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்தி விட்டது. இதனால் இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும்போது ஏற்படும் உயர் வெப்ப அழுத்தத்தால் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டது. 

விண்கலம் வெடிக்கும் என்பது விண்கலம் புறப்பட்ட போதே அப்போதைய நாசா விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருந்தது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெயின் ஹாலே இணையத்தளத்தில் பக்கம் பக்கமாக விவரித்திருந்தார். அதில் ”கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவரித்தோம். ஆனால் அந்த பழுதை சீராக்க முடியாது என இயக்குநர் கூறி விட்டார். இதை விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்க கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது விண்வெளிக்கு சென்ற விஞ்ஞானிகள் உயிரோடு பூமிக்கு திரும்பமாட்டார்கள், வெடித்து சிதறுவார்கள் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருந்தது. 

விண்வெளிக்கு சென்ற அந்த விஞ்ஞானிகள் 16 நாட்கள் தங்கள் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து,  பூமிக்கு திரும்ப நினைத்த விண்வெளி வீரர்களுக்கு அப்போது தெரியாது, தாங்கள் பூமியில் உயிரோடு இறங்க மாட்டோம் என்று. 

பூமிக்கு திரும்பிய விண்கலம் பூமிக்குள் நுழைந்த மறு நொடியே அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. உலக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் நிகழ்ந்தது இன்று தான்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்