குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம் - மத்திய அரசு...!

குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம் - மத்திய அரசு...!

குரங்கு அம்மை குறித்து பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்து விளக்கம் அளித்த அவர் குரங்கு அம்மை நோய் கேரளாவில் கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டினார். முதல் நோயாளி அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, கேரளாவில் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டதும் மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி மாநில அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்க தொடங்கியதோடு தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

குரங்கு அம்மை புதிய வகை நோய் அல்ல என்பதையும் அது 1970களில் இருந்தே ஆப்ரிக்காவில் இருந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்ட மான்சுக் மாண்டவியா குரங்கு அம்மை நோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குரங்கு அம்மை குறித்து அச்சம் கொள்ளக்கூடாது என வலியுறுத்திய அவர், விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் இந்த பிரச்சினையை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார்.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12-13 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அது பிறருக்கு தொற்றாமல் தடுக்க முடியும் என்றும் மான்சுக் மாண்டவியா, இந்த நோயைக் கட்டுப்படுத்தி நிதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் செயல்திட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி தயாரிபதற்கான பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்