தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி - ஆர்.சம்பந்தன்
தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி - ஆர்.சம்பந்தன்
74 வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கயின் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் கூறியதாவது:
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை ஒரே முறையாக அல்ல, படிப்படியாக நடைபெற்றது. இந்த நிலையிலும் அரசாங்கம் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீள சில அரசியல் கட்சிகளின் உதவியை நாடுகிறது.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறு எந்த தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெறாதது பெரிய குற்றமாகும். எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பொருளாதார அபிவிருத்தியை அடைய இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பவும், நாட்டு மக்கள் அனைவரின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் அரசியல் உடன்படிக்கையின் ஊடாக நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட முடியும் என்றார் சம்பந்தன்.