உலகின் மிகப்பெரிய மழைக்காடாக அமேசான் உள்ளது. இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது.
இந்நிலையில் கொலம்பியா நாட்டின் எல்லையின் அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தங்களது 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர்.
இதில் பிறந்து 11 மாதங்களே ஆன கைக்குழந்தையும் உடன் இருந்துள்ளது. அமேசான் அடர் வனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்கு உள்ளானது. இதில் விமானி, தம்பதி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
அதே சமயம் இந்த விபத்தில் 13 வயது, 9 வயது, 4 வயது 11 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனாலும் இவர்கள் அனைவரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் விபத்து நடந்த சில நாட்கள் கழித்தே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு படையினரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இதையடுத்து விமானி, தம்பதி ஆகிய 3 பேரின் சடலங்களை கைப்பற்றிய மீட்புப் படையினர் ‘குழந்தைகளின் நிலை என்ன?’ என தெரியாமல் குழப்பத்தில் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் விபத்தில் சிக்கிய குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தைகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மேலும் இந்த பணியில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக 17 நாட்களுக்கு பிறகு பச்சிளம் குழந்தை மற்றும் 3 சிறுவர் சிறுமிகளை ராணுவ வீரர்கள் அடங்கிய மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் கொலம்பியா நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- கோபிகா ஸ்ரீ