இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால் வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரஸுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.
இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.