செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. பெர்சவரன்ஸ் ரோவர் உடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது. மூன்று மீட்டர் உயரத்துக்கு மட்டுமே இன்ஜெனியூட்டி தரையில் இருந்து மேலே எழும்பும். பறக்கும். சுமார் 30 விநாடிகள் பறக்கும். பின்னர் தரையிறங்கிவிடும். இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை 96 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு தான் இருக்கிறது. இந்த சூழலில் மனிதன் அங்கு சென்றால் ஆக்ஸிஜனை உருவாக்கி சுவாசிக்க வைக்க இயலுமா என்கிற கேள்வி எழும். இதற்கு ஆம் என பதிலளித்து இருக்கிறது நாசா. மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை காண ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. இதற்காக மோக்சி என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளனர். கார் பேட்டரி அளவுள்ள இந்த பெட்டி ரோவரின் முன் பகுதியில் அமைந்துள்ளது. இது கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஆக்சிஜன் உருவாக்கும் திறன் கொண்டது. முதற்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை இது உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் மோக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளிவீரர்கள் பயன்படுத்த முடியும் என்பதோடு ரோவர் பூமிக்கு திரும்பும் போது உந்து சக்தியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.