2023 முதல் 2027 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று ஐ.நாவின் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2023-2027ல் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பமான ஐந்தாண்டு காலமாக இருக்கும். பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்தும் காரணிகளாக இருக்கும்.
உலக வெப்பநிலை விரைவில் பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்கை விட அதிகமாக இருக்கும். 2015 மற்றும் 2022 க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட எட்டு ஆண்டுகள் வெப்பமானவை. ஆனால் காலநிலை மாற்றம் துரிதப்படுத்தப்படுவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடமும், ஒட்டுமொத்த ஐந்தாண்டு காலமும், பதிவாகியிருக்கக்கூடிய வெப்பமானதாக இருக்க 98 சதவீத வாய்ப்பு உள்ளது.
2015 ஆம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கையில், 1850-1900-க்கு இடைப்பட்ட காலத்தில் அளவிடப்பட்ட புவிவெப்பத்தை விட 1.5 - 2 டிகிரி செல்சியஸுக்குக் மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், 2022 ஆம் ஆண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.15 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தது. 2023-2027 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குப் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ்க்கு அதிகமாக இருக்க 66 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
வரும் மாதங்களில் எல் நினோ உருவாகி வெப்பநிலை அதிகரிக்கும். கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் சுற்றுச் சூழலுக்கு விளைவை ஏற்படுத்தும். அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டேரி தாலாஸ் கூறுகையில்," உலகின் வெப்பநிலை பாரிஸ் உடன்படிக்கையின் அளவுகோலை மீறும் என்று கூறப்படவில்லை என்றாலும், தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டும் என்று ஐ.நாவின் அறிக்கை கூறியுள்ளது என்றார்.