ஒரு கிலோ மீட்டருக்கு படைகளை திரும்ப பெற்றது சீனா!

கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு படைகளை திரும்ப பெற்றது சீனா!
லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தனது படைகளை குறைந்தது ஒரு கி.மீ தூரத்துக்கு திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று இந்திய - சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில், சீன வீரர்கள் கால்வான் நதி வளைவில் இருந்து திரும்ப தொடங்கியுள்ளதாகவும், அப்பகுதியிலிருந்து கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து மட்டும் சீன படையினர் திரும்பி சென்றதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த வெள்ளிக்கிழமையன்று, லடாக் முன்னோக்கிய பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென ஆய்வு மேற்கொண்ட மூன்று நாட்களில் படைகளை திரும்பப் பெறுவதாக தகவல்கள் வெளிவருகிறது. 
தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி-யுடன் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டும் வகையில் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை இரு நாடுகளும் விரைந்து மேற்கொள்வது என்று பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், இரு தரப்பும் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை படிப்படியாக மேற்கொள்வது எனவும், எல்லையில் முந்தைய நிலை தொடா்வதை இரு தரப்பும் தனிப்பட்ட முறையில் மாற்ற முயற்சிக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதிலளித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஸாவோ லிஜியான், "இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில், கிழக்கு லடாக் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதைத்தொடா்ந்து கிழக்கு லடாக் பகுதியில் குவித்து வந்த படைகளை திங்கள்கிழமை திரும்பப்பெற தொடங்கிய சீனா, அங்கு அத்துமீறி அமைத்த ராணுவ முகாம்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை சீனா பின்வாங்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், "கல்வான் பள்ளத்தாக்கின் சா்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. 'பாயிண்ட்-14' ராணுவ ரோந்து பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம்களும் மற்றும் உள்கட்டமைப்புகளை அப்புறப்படுத்தப்படுவதோடு, சீன ராணுவ வாகனங்களும் பின்னோக்கி நகா்த்தப்பட்டு வருகின்றன. இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே, படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், எல்லையில் எவ்வளவு தூரத்துக்கு சீன ராணுவம் பின்னோக்கி செல்லும் என்ற விவரத்தை உடனடியாக அறியமுடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்