அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்“The Room Where it Happened: A White House Memoir,”என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ’அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ (“The Room Where it Happened: A White House Memoir,”) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தகம் வரும் ஜூன் 23 அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜான் போல்டன் பங்கேற்ற போது அவரிடம் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் தானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த போல்டன், ’டிரம்ப் அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் என்று நான் நினைக்கவில்லை. அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இருக்கும் எனவும் நான் கருதவில்லை’ என்று கூறினார்.
மேலும், ‘டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாக என்ன நல்லது என்பதை தவிர வேறு எந்த கொள்கைகளையும் என்னால் காண முடியவில்லை என்றும் டிரம்ப் தான் மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருக்கிறார். ’ என்று தெரிவித்தார்.