கொரோனா வைரஸால் சீனாவில் 2,943-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் சீனாவில் 2,943-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், கை குலுக்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்து கொண்டார். அப்போது அவர் அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருடன் மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பதிலுக்கு கைகொடுக்காமல் தலையை மட்டும் அசைத்து மரியாதை செலுத்தினார். உடனடியாக அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது.
அமைச்சரின் செயலைக் கண்டு ஏஞ்சலா மெர்க்கலும் சிரித்துக் கொண்டே தலையை அசைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஞ்சலா, அமைச்சர் சரியாகத்தான் செய்துள்ளார் என பாராட்டு தெரிவித்தார். ஜெர்மனியில் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.