'வாட்ஸ் ஆப் மூலம் இனி டிக்கெட் பெறலாம்' - சென்னை மெட்ரோ புதிய வசதி
சென்னையில் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்துவர். ஏனென்றால் ஜாலியா, ஏசி காத்து வாங்கிகிட்டே, லேட் ஆகுமே என்கிற டென்ஷன் இல்லாம பயணிக்க முடியும். நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர். அலுவலகம், கல்வி நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கிறது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்ட சென்னை மெட்ரோ நிர்வாகம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சிங்கார சென்னை அடையாள அட்டை சென்னைவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டிக்கெட் எடுப்பதற்கான வழியை மேலும் சுலபமாக்க வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் நாளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
மெட்ரோவில் பயணம் செய்ய மெட்ரோ நிர்வாக எண்ணுக்கு ஹாய் என ஒரு செய்தி அனுப்பினால், பயனாளர்களுக்கு ஒரு லிங்க் பகிரப்படும். அதை கிளிக் செய்து புறப்படும் இடம், சேரும் இடத்தைக் குறிப்பிட்டு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெற முடியும். அதில் உள்ள QR CODE-ஐ ரயில் நிலையங்களில் ஸ்கேன் செய்து சுலபமாக பயணிக்கலாம். மெட்ரோவில் பயணிக்க நீங்க மெசேஜ் செய்ய வேண்டிய வாட்ஸ் ஆப் எண் 8300086000. கைப்பேசி மூலமாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20% தள்ளுபடி தருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நாளை காலை 11.15 மணிக்கு நடைபெறுகிறது.