ட்விட்டர்: புதிய கட்டுப்பாடு விதித்த எலான் மஸ்க்- பயனாளர்கள் அதிர்ச்சி

இது ஒரு தற்காலிக முடிவு என அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் உலகளவில் அதிகம் பயனர்களை கொண்டுள்ள ஒரு தளம். மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த ஒருதளமாகவும், திரைப்பட அறிவிப்புகள், பிரபலங்களின் அடுத்தடுத்த படைப்புகள், உலகளவிலான முக்கிய நிகழ்வுகள், குறும்புத்தனமான வீடியோக்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு தளமாக இருந்து வருகிறது. உலகளவில் மக்களை இணைக்கும் பங்கும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு உண்டு.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ட்விட்டர் தளம் நேற்று திடீரென முடங்கியது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. அத்துடன் ட்வீட்களை முழுமையாக பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து ட்விட்டரை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும். அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் எலான் மஸ்க்.

ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.‌ புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.

இது ஒரு தற்காலிக முடிவு என அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். கடந்த சில மணி நேரமாக ட்விட்டர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அறிவித்துள்ளார். விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு 8000, மற்ற பயனர்களுக்கு 800 அன்வெரிஃபைடு பயனாளர்களுக்கு 400 வீதம் உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com