சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் பலரும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ் ஆப் செயலி பல்வேறு தரப்பு பயனர்களைத் தன்வசம் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர்.
இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்தும் வருகிறது. சமீபத்தில் கூட வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
அந்த வகையில் 'லாக் சாட்' என்னும் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சில உரையாடலை மட்டும் நீங்கள் லாக் செய்ய விரும்புகிறீர்களா? விரைவில் வரவிருக்கும் 'லாக் சாட்' (Lock Chat) அம்சம் அதை செய்வதற்கு உங்களுக்கு உதவும்.
இப்போது வாட்ஸ்ஆப் பயனர்கள் தனிப்பட்ட சாட்டை archieved மூலம் மறைத்து வைத்தாலும், பிறர் பார்க்க முடியாதபடி லாக் செய்ய முடியாது. ஆனால் வாட்ஸ் ஆப்பில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதியால் அது சாத்தியமாகும். இதில் கைரேகை அல்லது பாஸ்வேடுகளை பயன்படுத்தி தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும். இந்தப் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப்பில் கொண்டுவரும் பணியில் வாட்ஸ்ஆப் நிறுவன டெவலப்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பயனர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் செட் செய்திருக்கும் பாஸ்வேடு அல்லது கைரேகையை பதிவு செய்யாமல் யாரும் இந்த லாக் செய்யப்பட்ட சாட்களைப் பார்க்க முடியாது.
மேலும், இந்தப் புதிய வசதி லாக் செய்த சாட்களில் உள்ள போட்டோ, வீடியோ போன்ற மீடியா ஃபைல்களை கேலரியில் தானாகச் சேமிக்காமல் மறைத்து வைக்கவும் உதவும். இந்த வசதி ஏற்கெனவே ஆண்ட்ராய்டு மொபைல்களின் வாட்ஸ்ஆப் பீட்டா (v2.23.8.2) பயனர்களுக்குக் கிடைத்துள்ளது.
பிரைவேட் சாட்களை லாக் செய்யும் இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெசேஜை நீக்கம் செய்யும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், அனுப்பிய மெசேஜை திருத்தும் புதிய வசதியும் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.