ஆன்லைனில் பரவி வரும் ஹேக்கிங் வைரஸான 'Damm', ஆன்டி வைரஸ் மென்பொருளையும் ஊடுருவி சென்று தனிப்பட்ட தகவல்களைத் திருடக் கூடியது என தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர் பலரும் செல்போன் இல்லாமல் நாளே போகாது எனும் அளவிற்கு சமூக வலைதளங்களில் தங்களின் பாதி நேரத்தை செலவிடுகின்றனர். தங்கள் மொபைல் போனில் தங்களுடைய தனிப்பட்ட தகவல் பலவற்றையும் சேகரித்து வைத்திருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், டேட்டாக்கள் திருட்டு உள்ளிட்ட சைபர் குற்றங்கள் பலவும் நடந்து வருகிறது. ஆன்லைன் பண மோசடி, மார்ஃபிங், மிரட்டல்கள், என தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதால் ஏற்படும் குற்றங்கள் அதிகம். இதற்காக இணையத்தளத்தில் தகவல்களை திருடும் வைரஸ்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் ஆன்ட்ராய்டு போன்களை ஹேக் செய்யும் 'Daam'என்ற ஆன்லைன் மால்வேர் பரவி வருவதாக தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் உங்கள் அழைப்புப் பதிவுகள், தொடர்புகள், வரலாறு, மற்றும் கேமராவை ஹேக் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 'டாம்' வைரஸ்' கடவுச்சொற்களை மாற்றுதல், ஸ்கிரீன் ஷார்ட்களைப் படம் பிடித்தல், கோப்புகளை பதிவேற்றுதல், கோப்புகளை பதிவிறக்குதல் உள்ளிட்டவற்றை செய்யக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது சைபர் பாதுகாப்பு ஏஜென்சி. இந்த டாம் வைரஸ் ஆன்டி வைரஸ் மென்பொருள் இருந்தாலும் அதனையும் ஊடுருவி செல்லக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேக்கிங் வைரஸ் நம்பகத்தன்மை இல்லாத இணையத்தள பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவிறக்கம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. எனவே, இணையத்தள பயனர்கள் நம்பகதன்மை இல்லாத இணையத்தளங்களையோ, அல்லது ஆப்களையோ பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நம்பகத்தன்மை இல்லாத லிங்குகளை கிளிக் செய்வதையும் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.