பலூன் மூலம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Zephalto நிறுவனம் திட்டமிட்டுளளது.
பொதுவாக ராக்கெட்டுகள் மூலம் ஏவப்படும் விண்கலன்கள் மூலம் விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பலூன் மூலம் விண்வெளிக்கு செல்லும் வசதியை ஸ்பேஸ் நிறுவனங்கள் பல ஆயத்தபடுத்தி வருகின்றன.
நிலாவில் பாட்டி வடை சுடுகிறார்கள் என கதைசொன்ன காலமெல்லாம் மலையேறி போய், ராக்கெட் எடுத்து வருகிறேன் நிலாவுக்கு போய் வரலாம் என சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக பல நிறுவனங்களும் விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான சோதனை முயற்சிகளிலும் வெற்றியும்கண்டுள்ளன.
எலான் மஸ்க்கின் spacex நிறுவனம் ஏற்கனவே பல வெற்றிகரமான விண்வெளி சுற்றுலா பயணங்களை நடத்திவிட்ட நிலையில் மற்ற விண்வெளி நிறுவனங்களும் அதை பின்பற்றி விண்வெளி சுற்றுலாவிற்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் Zephalto நிறுவனம் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான பலூன்கள் மூலம் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
2025ம் ஆண்டு முதல் பூமியில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுலா செல்வதற்காக 1கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டு இப்போதிலிருந்தே முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இந்த ஸ்பேஸ் பலூனின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் கேபினில் ஆறு பயணிகளும், இரண்டு விமானிகளும் செல்ல முடியும்
25 கிலோ மீட்டர் உயரம் செல்ல ஒன்றரை மணி நேரமும், அந்த உயரத்தில் 3 மணி நேரப் பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தின் போது உயர் தர பிரெஞ்சு உணவு பரிமாறப்பட உள்ளது. மேலும் இந்த பயணத்தின் போது சுற்றுலா பயணிகள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் Wi Fi வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.