திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிக்க தானியங்கி இயந்திரம் கண்டுபிடித்த விவசாயிகள்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிக்க விவசாயிகள் தானியங்கி இயந்திரம் கண்டுபிடித்துள்ளனர்.
டிஜிட்டல் உலகமாக மாறி வரும் தற்போதைய காலக்கட்டத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைபாடு அதிகரித்து வருகிறது. விதை விதைப்பு, அறுவடை, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட சில விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.
பொதுவாக முருங்கை மரத்தில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும். இளம் குருத்து மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனால் விளைச்சல் பாதிக்கப்படும். முருங்கை மரத்தில் சில வகையான தாக்குதலை புழுக்களை கட்டுப்படுத்த சிறிதளவு தண்ணீருடன் மருந்து கலந்து தெளித்தால் மரத்தில் உள்ள புழுக்களை அழிக்கலாம்.
விவசாய நிலங்களில் நிலத்தில் விளைந்திருக்கும் பயிர்களுக்கு, மருந்து தெளிப்பானை முதுகில் தூக்கிக்கொண்டு நடந்தே மருந்து தெளித்துவிடலாம். ஆனால் உயரமாக அமைந்துள்ள முருங்கை மரத்திற்கு மருந்து தெளிப்பது மிகவும் கடுமையானது. இதனால் விவசாயிகள் இரண்டு பேர் இணைந்து தானியங்கி இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
கள்ளிமந்தையம் அருகே அமைந்துள்ள கப்பல்பட்டியைச் சேர்ந்த செல்வபிரகாஷ், சவடமுத்து, இவர்கள்தான் தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிகள்.அவர்களிடம் உள்ள சிறிய டிராக்டரின் பின்பகுதியில் மெஷினை பொருத்திக்கொண்டு, மருந்தில் தண்ணீர் கலக்க சின்டெக்ஸ் தொட்டியும் இணைத்து மேலும் டிராக்டரின் இரு பக்கங்களில் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளது.
டிராக்டரில் 3 அடி இடைவெளியில் உள்ள மரங்களை சுற்றிவரும்போது தானியங்கி மெஷினின் இரு பக்கங்களில் உள்ள குழாய்களின் வழியாக மருந்துகள் சுற்றி சுற்றி சொட்டுநீர் பாசனம்போல பீய்ச்சி அடித்து தெளிக்கும் வகையில் இந்த இயந்திரம் அசத்தல் ஆன வகையில் உள்ளது.