நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் சீனு (23). இவர், படித்துவிட்டு ஏர்ப்போர்ட் பணிக்கு செல்ல விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனுவுக்கு, அண்டை வீட்டைச் சேர்ந்த சத்யா என்பரின் மனைவி மீனா (29) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சத்யாவிற்கும், சீனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் சீனுவுக்கும், மீனாவிற்கும் இடையே உள்ள உறவு குறித்து சத்யா தனது சகோதரி மகன் பிரவீன்குமார் (20) என்பவரிடம் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளார்.
பிரவீன்குமாருக்கு சத்யா தாய் மாமன் முறை என்பதால் சீனுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோவை விமான நிலைய பணிக்கு சீனுவுக்கு அழைப்பு வந்துள்ளது.
எங்கே தனது தாய்மாமனின் மனைவியான மீனாவையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ? என்ற பயத்தில் இருந்த பிரவீன்குமார் நேற்று இரவு 1 மணி அளவில் மது போதையில் சீனுவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீனுவை மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமார் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சீனு ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காப்பாற்றுமாறு கதறி துடித்தபடி மீனாவின் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும் பாதி வழியிலேயே சீனு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து வேலக்கவுண்டன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான உறவால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.