புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய ‘கடன் செயலி’ - இளைஞர் விபரீத முடிவு

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ‘கடன் செயலி’ மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மொபைல் மூலம் கடன் வழங்கும் செயலி ஒன்றில் ராஜேஷ் கடன் வாங்கி, வாங்கிய தொகை முழுவதையும் திருப்பி செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கடன் பெற்ற செயலி மூலமாக மேலும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு தொடர்ந்து தொல்லை தரப்பட்டுள்ளது. ராஜேஷ் பணத்தை செலுத்தாத நிலையில் அவரது போட்டோவை நிர்வாணமாக்கி ராஜேஷ் போன்று சித்தரித்து அதை அவரது மொபைலுக்கே அனுப்பியுள்ளனர்.

மேலும் பணத்தை திருப்பித் தரவில்லை எனில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதாக அவர் கடன் பெற்ற செயலி மூலம் மிரட்டப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த ராஜேஷ் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் செயலி மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com