தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் முகீத் (23). இவர் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார். பின்னர் தனது தாய், தந்தை, உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரிடமும் தான் காவலர் தேர்வில் தகுதி பெற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறி சென்றுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் உடையில் ஊர் முழுவதும் சுற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை பொத்தேரியில் செய்யப்பட்டு வரும் கல்லூரிக்கு காக்கி பேண்ட், காவலர்கள் அணியும் ஷூவுடன் சென்ற அவர் தனக்கு கல்லூரியில் எம்.டெக் படிப்பதற்காக அட்மிஷன் தர வேண்டும். அதிலும் ஸ்காலர்ஷிப் வேண்டும் என கூறி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் அவரிடம் காவலருக்கான அடையாள அட்டையை கேட்ட போது போலி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் மறைமலைநகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு போலி காவலர் என்பதும், கல்லூரியில் அட்மிஷன் கேட்டு மிரட்டியதும், தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் கல்லூரிக்கு சென்று காவல் உதவி ஆய்வாளர் என மிரட்டி அட்மிஷன் கேட்ட இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.