நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வழக்கம் போல் மதுபான பாட்டில்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அங்கு வந்த மதுபிரியர்கள் 2 பேர் ஓசிக்கு மது கேட்டுள்ளனர். டாஸ்மாக் கடை ஊழியர்கள் மது தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் ஒருவர் திடீரென கடையின் ஜன்னல் கதவை வேகமாக அடித்து உடைத்து ஜன்னல் வழியாக கை விட்டு மது பாட்டிலை எடுத்துத் தப்பியோட முயன்றுள்ளார்.
இந்தநிலையில் சுதாரித்துக் கொண்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் சுரேஷ் [33] அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருத்தபாண்டி[ 25] என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.