சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் சாலையில் செயல்பட்டு வரும் மதுக்கடையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோழி செல்வம், மனோஜ் ஆகிய இருவரும் மது அருந்துவதற்காக வந்துள்ளனர்.
பின்னர் குடித்துவிட்டு போதையில் வெளியே வந்து இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மாறி மாறி குத்துவதுபோல் விளையாடியுள்ளனர். அப்போது போதையில் நிலைதடுமாறி செல்வம் தனது நண்பர் மனோஜை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதை கண்டு தடுக்க வந்த அருகில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரையும் செல்வம் குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருவரையும் அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தப்பியோடிய செல்வத்தை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
இதன் பிறகு புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகரில் அதுவும் போக்குவரத்து மிகுந்த பரபரப்பான சாலையில் திடீரென இருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.