காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர், கடந்த 3 வருடமாக தனது கிராமத்துக்கு அடுத்த மேம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
காதலிக்கும் சமயத்தில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். திருமணம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நம்பி இருவரும் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக பவித்ரா கர்ப்பம் அடைந்துள்ளார். இதை விக்னேஷிடம் தெரிவித்த நிலையில் ‘கர்ப்பமான பெண்ணை எங்களது குடும்பத்தில் திருமணம் செய்ய விடமாட்டார்கள்’ என கூறி பவித்ராவிற்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தந்து கருவை கலைத்துள்ளார்.
இந்நிலையில் பவித்ராவை தொடர்புகொண்ட ஒரு பெண் ‘எனது தங்கையை உன்னுடைய காதலன் காதலிக்கிறார்’ என கூறியுள்ளார். இதுகுறித்து விக்னேஷிடம் பவித்ரா கேட்டபோது மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்யுமாறு பலமுறை விக்னேஷிடம் பவித்ரா கெஞ்சியும் எவ்வித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம் என பல இடங்களில் பவித்ரா புகார் மனு அளித்து 18 நாட்கள் ஆகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தனது குடும்பத்துடன் வந்து பவித்ரா புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ‘என்னை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து வரும் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.