புதுச்சேரி: அல்ஜீரிய பெண்ணை கரம் பிடித்த இளைஞர் - சன்மார்க்க முறையில் அசத்தல் திருமணம்

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் வள்ளலாரின் சன்மார்க்க முறையில் அல்ஜீரிய பெண்ணை கரம் பிடித்த நிகழ்வு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சன்மார்க்க முறையில் நடந்த திருமணம்
சன்மார்க்க முறையில் நடந்த திருமணம்

புதுச்சேரி சித்தன்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி நோயல். தம்பதியின் மகன் அபிலாஷ். இவர் நெதர்லாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார்.

அபிலாஷ் தன்னுடன் பணியாற்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பாத்திமா ஹப்பி என்கின்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அபிலேஷின் தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். காதலிக்கும் பெண் இஸ்லாமியர். எனவே, இரு வீட்டாரின் சம்மதத்துடன் சமயம், சாதி, மதம், இனம், மொழி கடந்து இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் அன்பை மட்டுமே மையப்படுத்திய வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இந்தியாவுக்கு வந்த இவர்கள் சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் பெரியோர்கள் முன்பாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி சமரச சத்திய சாதனை சங்கம் என்ற வள்ளலார் அவையில் உலகப் பொதுமறை திருக்குறள் மற்றும் வள்ளலாரின் திருமுறை ஆகியவற்றின் மீது உறுதி ஏற்று திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணத்தில் சன்மார்க்கிகள் பங்கேற்று வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் 6ம் திருமுறை பாடலை அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த திருமணத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ முறைப்படி இல்லாமல் சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் செயினை கழுத்தில் அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மணமக்களை வாழ்த்தினர். அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பெண் இந்தியாவில் அதுவும் புதுச்சேரியில் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்துகொண்டது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com