ஆங்கிலேயர் காலத்து பழமையான ஏற்காடு காவல் நிலையம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகும். இது ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு1894 ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. கட்டிடம் சேதாரமடைந்ததால் 2015-ல் இடித்து புதியதாக கட்டுவதற்கு சேலம் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்தது.
“இது ஆங்கிலேயர் விட்டுசென்ற நினைவுசின்னம். அதை இடிக்க கூடாது” என்று ஏற்காடு மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கும் தொடரப்பட்டது. இதனால் அந்த பழைய காவல்நிலையம் இடிக்கப்படுவது தடுக்கப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அதன் பக்கத்திலேயே புது காவல் நிலையம் ஒன்றும் கட்டி திறந்துவிட்டார்கள் மாவட்ட காவல்துறையினர்.
இந்நிலையில் பழைய காவல்நிலையத்தை புதுப்பித்து நினைவு சின்னமாக்கி, மக்கள் பார்வைக்காக திறக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை திட்டமிட்டது. அதன்படி, சில லட்சம் மதிப்பீட்டில் செலவு செய்து புதுப்பித்த ஆங்கிலேயர் கட்டிய காவல் நிலையத்தை, கடந்த வாரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், சேலம் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் சில காவலர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது ஏற்காடு வரும் மக்கள் பழமை மாறாமல் புதுபிக்கப்பட்ட ஸ்டேஷனை சுற்றி பார்த்து விட்டு செல்பி எடுத்து கொண்டு செல்கிறார்கள். இந்த கட்டிடத்துக்குள், நூற்றாண்டுக்கு முன்னர் பயன்படுத்திய பழமையான துப்பாக்கிகள், சிறை, சிறிய அளவிலான நூலகமும் இருக்கின்றன.
ஏற்காடு இன்ஸ்பெக்டர் ராஜ்மோகனிடம் இதுகுறித்து பேசினோம். “மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து கட்டிடத்தை இடிக்காமல் பாதுகாக்க முடிவு செய்தோம். திருவேணி குரூப் 8 லட்சம் செலவு செய்து இந்த கட்டிடத்தை புதுப்பித்து கொடுத்தார்கள். இப்போது மக்கள் பார்வையிடும் இடமாக காவல் நிலையம் மாறியிருக்கிறது. கட்டிடம் கட்டி 129 வருஷம் ஆச்சு. ஆங்கிலேயர்கள் கட்டிய காவல் நிலையம் இது” என்றார்.
ஏற்காடு போறவங்க இதையும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.