ஏற்காடு 46-வது கோடை விழா -மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவினை தமிழ்நாடு அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காட்டில், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் உற்சாகத்தோடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 46 -வது ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 28-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெறுகிறது.
கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான துவக்க விழா நிகழ்ச்சிகள் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விழாவினை துவக்கி வைத்தனர்.
குறிப்பாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் லட்சக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
40,000 ரோஜா மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பறக்கும் டிராகன், 30,000 ரோஜா மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கப்பல், குழந்தைகளை கவரும் வகையிலான சோட்டாபீம், ஹனி பீ உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்கள், ஆஸ்திரேலிய தேசிய விலங்கான கங்காரு குட்டியை வயிற்று பையில் சுமப்பது போன்ற வடிவங்கள வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
கோடை விழாவினை ஒட்டி நாள்தோறும் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பல்வேறு காரணங்களால் கோடை விழா நிகழ்ச்சிகள் தாமதமாக துவங்கியதால் நேரமின்மை காரணமாக மக்கள் பிரதிநிதிகள் சிறிது நேரம் மட்டுமே பேசுமாறு மேடையிலேயே அமைச்சர் நேரு கூறினார்.
இருப்பினும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த காரணத்தால், அமைச்சரே குறுக்கிட்டு "போதும் நன்றி வணக்கம்" என்று கூறி அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர் அருள் நீங்கள் பேசவும் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.