சிறை காவலரின் தவறான பேச்சு... நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்.பியிடம் புகார்

சிறை காவலர் வாட்ஸ் அப் மூலம் தவறாக பேசியுள்ளதை அடுத்து, அவரை பற்றி நாமக்கல் எஸ்பியிடம் புகார் அளிக்க சென்றுள்ளார் ஒரு பெண்.
சிறை காவலர் விஜயகாந்த்
சிறை காவலர் விஜயகாந்த்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் மெக்கானிக் சிவக்குமார். இவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள கணவரை பார்க்க முருகேஸ்வரி (29) கடந்த மாதம் 25ம் தேதியன்று சேலம் மத்திய சிறைக்கு சென்றுள்ளார். அப்போது மனுபதிவு செய்யும் இடத்தில் இருந்த சிறை காவலர் விஜயகாந்த் என்பவர் முருகேஸ்வரி செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து முருகேஸ்வரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் போன் செய்து தவறாக பேசியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்து கணவரிடம் கூறியுள்ளார் முருகேஸ்வரி. இதற்கிடையில், தன்னுடன் சிறையில் நில அபகரிப்பு வழக்கில் இருந்த தனபாலிடம் இது குறித்து கூறியுள்ளார். இவர் மறைந்த ஜெயலலிதாவின் டிரைவராக இருந்து, விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமாருக்கு உதவிபுரியும் தனபால்
சிவக்குமாருக்கு உதவிபுரியும் தனபால்

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த தனபால் சிறைத்துறை விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது, அங்குள்ள காவலர்கள் மணிக்குமார், இளமாறன் மற்றும் ஒரு காவலர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவருடன் உடந்தையாக செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக முருகேஸ்வரி மற்றும் தனபால் நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதையடுத்து தனபாலிடம் பேசினோம், "சிவக்குமாரும் நானும் ஒரே பிளாக் சிறையில் தான் இருந்தோம். அப்போதுதான் மனைவியிடம் சிறை காவலர் ஒருவர் தவறாக பேசியுள்ளார் என்பதை பற்றி சொன்னார். வெளியில் வந்ததும் சிவக்குமார் மனைவியுடன் சேலம் சிறைத்துறையில் புகார் கொடுத்தோம் ஆனால் அது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, அதனால் நாமக்கல் எஸ்பியிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம்" என்றார்.

சேலம் சிறைத்துறை அதிகாரி வினோத் தரப்பில் பேசியபோது "சிறைகாவலர் மொபைலை சைபர் கிரைமிற்கு அனுப்பியுள்ளோம். அது வந்தற்கு பின்பே நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com