துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாகக் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் சாலையில் நடந்து செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அந்த பகுதியில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கக்கோரியும், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடும் வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் துறையூர் - பச்சைமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் 3 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "வீட்டிலிருந்து பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது கஞ்சா போதையில் வாலிபர்கள் தகாத வார்த்தைகளில் பேசி, வம்பு செய்கின்றனர். இதனால் இளம்பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. பலமுறை துறையூர் காவல்துறையில் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாததால் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த துறையூர் தாசில்தார் வனஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் துறையூர் வட்டார மலைப்பகுதியில் பெருமளவு கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து தான் திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு விற்பனை செய்யப்படு வருகிறது. கஞ்சா எங்கே உள்ளது என போலீசாருக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கஞ்சா விற்கும் நபர்களால் சில காவலர்கள் ஆதாயம் பெற்று வருவதால் வழக்கு தொடர்ந்தாலும் வழக்கை நீர்த்துப் போகச் செய்கின்றனர் எனச் சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் துறையூரில் உள்ள சுற்றுலாத் தலமான பச்சைமலை, புளியஞ்சோலை உள்ளிட்ட பகுதிகள் காடு, மலை நிறைந்து காணப்படுவதால் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
- ஷானு.