தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கட்டாலங்குளத்தில் ரூ.1 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான துவக்க விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் கனிமொழி எம்.பி மற்றும் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கழுகுமலை பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேஸ்வரபுரம், துரைசாமிபுரம், தெற்கு கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக கழுகுமலை பேரூராட்சியை நோக்கி கனிமொழி எம்.பி வந்தபோது வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்தனர். இதன் பின்னர், கனிமொழியின் காரை மறித்து பெண்கள் முற்றுகையிட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத கனிமொழி காரை விட்டு இறங்கி வந்து என்ன பிரச்னை என விசாரித்தார். அதற்கு பெண்கள், ‘எங்களது பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை.
இதனால் குடிக்க நீர் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்’ என, புகார்களை அடுக்கினர்.
இதைக்கேட்ட கனிமொழி எம்.பி, ‘உங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார்.
இதை ஏற்க மறுத்த அப்பகுதி பெண்கள், ‘நீங்கள் சொல்லிவிட்டு போய்விடுவீர்கள். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்’ என்று கூறி அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து இனி அப்படி நடக்காது. அதிகாரிகளிடம் சொல்லி உடனே தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
கனிமொழி எம்.பி-யின் காரை தொகுதி மக்களே திடீரென மறித்து முற்றுகையிட்ட சம்பவம் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.