'புகைப்படத்தை காட்டி மிரட்டும் அதிமுக நிர்வாகி' போராட்டத்தில் குதித்த பெண்கள் - என்ன நடந்தது?

100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை மிரட்டி வரும் அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பெண்கள்
போராட்டத்தில் பெண்கள்

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிச்சாவடி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அங்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், சுரேஷ் மற்றும் அதிமுக நிர்வாகி வெங்கடாசலம் ஆகியோர் 100 நாள் பணியாளர்களிடம் 10 அட்டைக்கான ஊதியத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதிய உணவு இடைவேளையின் போது 100 நாள் திட்ட பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து தங்களுடைய செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை அ.தி.மு.க நிர்வாகியான வெங்கடாசலம் தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். 'வேலை நேரங்களில் யாரும் வேலை செய்யாமல் படம் பார்த்து கொண்டுள்ளீர்களா' யாருக்கும் ஊதியம் கிடைக்காமல் செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com