திருச்சி: ‘வீடியோ கால் செய்து தொல்லை தரும் இன்ஸ்பெக்டர்’ - பேராசிரியை பரபரப்பு புகார்

திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘வீடியோ கால்’ செய்து தொல்லை தருவதாக சென்னையைச் சேர்ந்த பேராசிரியை அளித்திருக்கும் புகார் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிஜா
கிரிஜா

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தற்போது திருச்சி பாலக்கரை கிருஷ்ணன்கோவில் தெரு அருகே தனியாக வசித்து வருகிறார்.

தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கிரிஜா தனியாக கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகின்றார். 

இந்நிலையில் ஒரு புகார் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார். 

இதுகுறித்து ஆட்சியர் அலுவலக வாசலில் கிரிஜா கூறுகையில், ‘சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி கணிதம் படித்து வருகிறேன். மேலும், இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.  

இந்நிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

அப்போது எனது செல்போனை காவல் நிலைய அதிகாரியான சுகுமார் வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே அந்த முதல் தகவல் அறிக்கையில் சில தவறான தகவல்கள் இடம் பெற்று இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் காவல்துறை துணை ஆணையரை சந்திக்க காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றேன். 

என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவதுபோல நடித்த காவல் ஆய்வாளர் சுகுமார், எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். தன் ஆசைக்கு நான் இணங்காவிட்டால் ஊரை விட்டு துரத்துவேன் எனக் கூறினார்.

அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி லதா உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கக்கூடாது’ என தெரிவித்தார். 

இந்த குற்றச்சாட்டு குறித்து காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் கூறுகையில், ‘ என் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார்’ என்றார். 

இதுகுறித்து காவல் ஆய்வாளரின் மனைவி கூறுகையில், ‘என் வீட்டுக்காரர பத்தி தப்பு தப்பா அந்த பொண்ணு பொய் புகார் கொடுத்திருக்கு. அவர் டூட்டியில் இருக்கும்போது பலர் பலவிதமான புகார்களை கொடுக்கிறாங்க.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது இவரது வேலைதாங்க.  அப்படித்தான் அந்தப் பொண்ணு தொடர்பா ஒரு புகாரை இவர் விசாரித்து நடவடிக்கை எடுத்தார்.

இதனால அந்த பொண்ணு இவர் மேல இம்ப்ரஸ் ஆயிட்டு இரவு பகல் பார்க்காது பல்வேறு மெசஜ்களை அனுப்பும். இவரும் என்னிடம் இதுகுறித்து சொல்லியிருக்கார். ஒரு ஆம்பளைக்கு ஒரு அளவுக்கு மேல ஒரு பொண்ணு மெசெஜ் அனுப்பறது தப்புன்னு சொல்லி நானும் சொல்லியிருக்கேன்.

இவரோட நண்பர் மூலமாவும் நான் விசாரிச்சேன். அந்தப் பொண்ணுதான் இவரு மேல பைத்தியமா சுத்தியிருக்கு. பல்வேறு மெசெஜ் அனுப்பியிருக்குங்க.

யாரோ தூண்டுதலின்பேரில் என் வீட்டுக்காரரை பழிவாங்கும் விதமாக இந்தப் பொண்ணு பொய்யான புகார கொடுத்திருக்குங்க. இந்தப் பொண்ணு பத்தி நான் காவல் ஆணையரிடமும் நேரிடையாக முறையிட்டிருக்கிறேன்’ என்றார்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com