சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சசிகலா (31).
தம்பதிக்கு பரத் என்ற மகன் மற்றும் காவியா என்ற ஒரு மகள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சசிகலா தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் தந்தை ராமனுடன் திருப்பூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு அப்பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் சசிகலா சடலமாக கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காரிப்பட்டி போலீசார் வந்து சசிகலாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ரத்தக்கறையுடன் கிடந்த மது பாட்டிலை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி, கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சசிகலா, ராமன் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர். இந்த நிலையில் சசிகலாவிற்கும், ராமனின் நண்பர் பிரபு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
எனவே சசிகலாவிற்கும், பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பிரபுவிடம் விசாரணை நடக்கிறது.
அதேப்போல் சசிகலாவின் கணவர் ராமனிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. மேலும் சசிகலாவுடன் வேறு யாராவது தொடர்பில் இருந்தார்களா? என்றும் தீவிரமாக விசாரிக்கிறோம்’ என்றனர்.