தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தனியார் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் நீலாம்பால் (75). இவர், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் கடந்த 40 வருடங்களாக மருத்துவ சேவை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மகள், பாபு என்ற மகன் ஆகியோர் உள்ளனர். உமாமகேஸ்வரிக்கு திருமணம் ஆன நிலையில், திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கும், தந்தையும் டாக்டருமான நீலாம்பாலுக்கும் இடையே சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு உமாமகேஸ்வரி பட்டுக்கோட்டையில் உள்ள தந்தை நீலாம்பாலுக்கு சொந்தமான மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு இருந்த சொத்து மற்றும் முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தனது உடைமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி டாக்டர் நீலாம்பால் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அவரது உறவினர்கள் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
மகளுடன் ஏற்பட்ட தகராறில் டாக்டர் ஒருவர் திடீரென தன் வீட்டின் முன்பே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.