கோவையில் பெண் ஒருவரை ஃபாலோ பண்ணி துப்பறிவதாய் நினைத்து வடிவேலு பட பாணியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக நீதிமன்றங்களும், காவல்நிலையங்களும் எத்தனையோ வகையான வழக்குகளை, புகார்களை சந்தித்து வருகின்றன. அதில் சில குரூரமானவை, சில கண்ணீர் சிந்த வைப்பவை, சில ரத்தம் கொதிக்க வைப்பவை ஆனால் சிலவோ விலா நோக சிரிக்க வைப்பவை.
அப்படித்தான் கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் பதிவான புகார் என்று கடுப்புக்கு நிகராக காமெடியையும் உருவாக்கியுள்ளது.
அந்த புகார் இதுதான்….
கோவை சுந்தராபுரம் அழகு நகர் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா பேகம். 33 வயதான இவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இவரது கணவர் 42 வயதான முகமது சித்திக் பாஷா. கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுல்தானா தன் கணவரை பிரிந்து அம்மா வீட்டில் வசிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ஸ்கூட்டரில் அழகேசன் சாலையில் சுல்தானா வந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் இவரை பின் தொடர்ந்துள்ளார். மேலும் மொபைலில் போட்டோவும் எடுத்தபடியே வண்டியில் வந்துள்ளார். இதை கவனித்துவிட்டாலும் பெருசாக கண்டு கொள்ளாமல் அலுவலகம் சென்றுவிட்டார் அந்தப் பெண்.
கொஞ்ச நேரம் கழித்து வெளி வேலை விஷயமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுல்தானாவுக்கு அதிர்ச்சி. காரணம் அந்த இளைஞர் இவரது அலுவலகத்துக்கு பக்கத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்ததோடு, இவரைப் பார்த்ததும் மொபைலை எடுத்து போட்டோ எடுக்க முயற்சித்திருக்கிறார்.
இதில் கடுப்பான சுல்தானா, கவனிக்காதது போல் அலுவலகத்தினுள் சென்று தன் சக ஊழியர்களிடம் இதை சொல்லியுள்ளார். சட்டென வெளியே வந்த ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த ஷாக் தகவலை அவர் கூறியுள்ளார். அதாவது தான் ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் தன் பாஸ் சிவப்பிரகாசம் சொன்னதால் சுல்தானாவை ஃபாலோ செய்ததாகவும் சொல்லியுள்ளார்.
உடனே ‘கூப்பிடுடா அந்த சிவப்பிரகாசத்த, சாய்பாபா காலனி ஸ்டேஷனுக்கு வர சொல்லு’ என்று சக ஊழியர்கள் கூறிவிட்டு சுல்தானாவோடு ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தனர். 72 வயதான சிவப்பிரகாசம் தட்டுத் தடுமாறி ஸ்டேஷனுக்கு வந்ததும் அவரிடம் போலீஸ் விசாரித்தபோது சுல்தானாவின் கணவர் முகமது சித்திக் பாஷா சொல்லித்தான் இந்த வேவு வேலையை தாங்கள் பார்ப்பதாக சொல்லியுள்ளார். அவரையும் அழைத்து விசாரித்துவிட்டு ‘மனைவி மேலே சந்தேக்கப்படுற அதிலேயும் டிடெக்டீவ் வெச்சு வேவு பாக்குறியே வெட்கமா இல்லையா?’ என்று திட்டி, வழக்கு பதிவு செய்தனர்.
அதேவேளையில் அந்த துப்பறிவாளர்கள் இருவரையும் தூக்கி ஜெயிலில் போட்டுள்ளனர். இருவரையும் விசாரிக்கும்போது ‘துப்பறிதல் அப்படிங்கிறது ரகசியமான ஒரு கலை. துப்பறியும் கம்பெனி நடத்த முறையான அனுமதி, அங்கீகாரம் வேணும் . அதைவிட்டுட்டு இப்படி பெப்பரபே!ன்னு ஃபாலோ பண்ணி, ஒரு லேடியை அவங்க சம்மதம் இல்லாம போட்டோ எடுத்திருக்கியே உனக்கெல்லாம் கேவலமா இல்லையா?’ என்று கேட்டு சரமாரியாக திட்டியுள்ளனர்.
-ஷக்தி