12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஏப்.21ம் தேதி தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்குத் தி.மு.க கூட்டணிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, வி.சி.க, ம.ம.க, உள்ளிட்டவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்தன. இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தின.
இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஏப்.24ம் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன்.
12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும்.தி.மு.க அரசு கொண்டு வந்த சட்டமாகவே இருந்தாலும், தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச-வும் எதிர்த்தது. இவை தி.மு.க-வின் ஜனநாயக தன்மை காட்டுவதாக உள்ளதாக கூறினார்.
மேலும், விட்டுக்கொடுப்பதை நான் என்றுமே அவமானமாகக் கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன் என்றார். 12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாகக் கூறிய பின்னரும் அவதூறு பரப்பி வருகின்றனர். வட, தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், முதலீடுகள் ஈர்க்கவும், வேலை வாய்ப்பை தரவும் 12 மணிநேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது என்றார். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதைத் திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான் என்று தெரிவித்தார்.
முன்னதாக சிவப்பு சட்டையில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலாளர்கள் அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, மே தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.