சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பாலமலையான்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(55). கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமாகி சிறிது காலத்திலியே மாரிமுத்துவை பிரிந்துவிட்டார் அவரது மனைவி. மாரிமுத்து தனது அம்மா குப்பாயியுடன் வசிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி கவிதா வீட்டிற்கு சென்று சில நாட்களுக்கு முன் மாரிமுத்து தவறாக பேசி, தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சண்முகம் இனிமேல் என் வீட்டுக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதையடுத்து நேற்று விடியற்காலை சண்முகம் வீட்டிற்கு சென்று கவிதாவை பார்க்க மாரிமுத்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவிதா, கணவர் சண்முகத்திடம் தகவல் கொடுத்துள்ளார்.
சண்முகம் உடனடியாக சென்று பார்ப்பதற்குள் மாரிமுத்து தன் வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இதையறிந்த சண்முகம், தனது உறவினர்களான பூபதி, குமார், ராஜாமாணிக்கத்திற்கு போன் செய்து வர சொல்லியுள்ளார். வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாரிமுத்துவை கஸ்தூரிப்பட்டியில் உள்ள தண்ணீர் தொட்டி என்ற இடத்தில் வழிமறித்து கட்டையால் அடித்துள்ளனர்.
காயமடைந்து மயக்கத்தில் கீழே விழுந்த மாரிமுத்துவை அந்த இடத்திலே போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சிசை பவனின்றி மாரிமுத்து உயிரிழந்தார்.
சேலம் எஸ்.பி அருண் கபிலன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் கவிதா, சண்முகம் உறவினர்கள் மூன்று பேர் என்று மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் எதற்காக இந்த கொலை செய்தீர்கள் என்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசாரிடம் பேசினோம். "வயதில் பெரியவரான மாரிமுத்து, கவிதாவிடம் தவறாக நடக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வீட்டிற்கு அருகில் அடிக்கடி சென்றுள்ளார். தொடர்ந்து இடையூறு கொடுக்கிறார் என்று கவிதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துவிட்டார், கொலையில் முடிந்துவிட்டது" என்றார்கள்.