உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலையை உடைத்து நொறுக்குவேன் என்று பாஜக பிரமுகர் டாக்டர் மோதி முரளி என்பவர் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பாஜக பிரமுகர் டாக்டர் மோதி முரளி என்பவர் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தாவது, ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கிழட்டுப் பய பெரியார் சிலையை கூடிய விரைவில் உடைப்பேன், உடைத்தே தீருவேன். நாங்கள் வழிபடும் ஆலயங்களை இடிக்கும் இந்த திராவிட அரசு, பெரியார் சிலையை உடைத்தால் இந்து எதிர்ப்பாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அரசியல் களத்தில் எனப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் அன்பு உள்ளிட்டோர் ஸ்ரீரங்கத்திற்கு சென்று பெரியார் சிலை இருக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பினை பலப்படுத்தி இருக்கின்றனர். யார் இதை பதிவிட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதற்கட்ட தகவலின்படி தந்தை பெரியாருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியை சேர்ந்த பரணி என்பதும், அவரை ஈரோட்டில் வைத்து கைது செய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், பெரியாரை வைத்து மீண்டும் பாஜகவினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், கலவரத்தை உருவாக்கவே திட்டமிட்டு இப்படியான இழிவான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதாக திக பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஷானு