காட்பாடி ரயில் நிலையத்தில் 3 மாத கைகுழந்தையை அருகிலிருந்த பயணியிடம் கொடுத்துவிட்டு தாய் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
காட்பாடி ரயில் நிலையத்திற்குள் நேற்று மாலை 35 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார். அவர் கையில் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அங்கிருந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்த அவர் அருகில் இருந்த தம்பதியிடம், குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்ளுங்கள். நான் பாத்ரூம் போய்விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி குழந்தையை கையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்று வருவதாய் சொல்லி சென்ற பெண் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பயந்து போன அந்த தம்பதியினர் காட்பாடி ரயில்வே போலீசாரிடம் நடந்ததை தெரிவித்து குழந்தையை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்தனர். விசாரணையில் அந்த தம்பதி சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் ரயிலுக்கு போக காத்திருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிய வந்தது.
அந்த தம்பதியினர் சொன்ன தகவலின்படி, போலீசார் உடனடியாக ரயில் நிலைய சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு பெண் குழந்தையுடன் ரயில் நிலையத்திற்குள் நுழைவதும், இவர்களிடம் குழந்தையை ஒப்படைத்ததும், பாத்ரூம் போகிறேன் என்று பாத்ரூம் பக்கமாக போய் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி இருப்பதும் தெரிய வந்தது. வெளியேறிய அவர் ஆட்டோ டிரைவர்களிடம் கண்ணமங்கலம் போக எவ்வளவு கட்டணமாகும் என்று விசாரித்த விவரமும் தெரியவந்தது.
அதனால் அந்தப்பெண் கண்ணமங்களம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சி.சி.டி.வி. காட்சிகளை கண்ணமங்களம் பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மூன்று மாத பெண் குழந்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை செய்ய அட்மிட் செய்துள்ளனர். இது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.