கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு 3 தினங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியிலிருந்து அணில் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். வால்பாறையை சுற்றி பார்த்துவிட்டு மலுக்கப்பாறை அதிரப்பள்ளி வழியாக கொல்லம் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் யானை கயா என்ற பகுதியில் யானைகள் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து மறுபக்கம் சென்றுள்ளன. எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த யானை ஒன்று திடீரென இவர்கள் வந்த காரின் முன்பாகத்தை தாக்கி கண்ணாடியை உடைத்தது.
இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் காருக்குள் இருந்தபடி வீடியோ எடுத்துள்ளனர். உடனே அந்த காருக்கு பின்னால் வந்த மற்ற வாகனங்கள் ஒலி எழுப்பியதை அடுத்து யானைகள் அங்கிருந்து சென்றன.
பின்னர், நூலிழையில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நான்கு பேரும் கொல்லம் பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தாமலும், வன விலங்குகளை தொந்தரவு செய்யாமலும் செல்ல வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.