தமிழக கடலோரப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கில எச்சத்தை கடத்திய 50-க்கும் மேற்பட்டோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு 300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அம்பர் கிரீஸை கைப்பற்றியிருக்கின்றனர்.
கடந்த மாதம் தூத்துக்குடியில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ எடையுள்ள அம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே 6 கிலோ எடையுள்ள அம்பர் கிரீஸை டூவீலரில் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ‘அம்பர் கிரீஸ்’ எனப்படும் திமிங்கில எச்சம் எப்படி உருவாகிறது? இதனை ஏன் கடத்துகிறார்கள்? இதன் பயன் என்ன? என்ற கேள்விகளை வன விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் குமரகுருவிடம் கேட்டோம்.அவர், “அம்பர் கிரீஸ்’ எனப்படுவது திமிங்கிலத்தில் வாய்வழியே வெளியேற்றக்கூடிய ஒரு வகையான எச்சம் என்று கூறலாம். இதனை மீனவர்கள் திமிங்கிலத்தின் வாந்தி என்றும் கூறுவார்கள்.
திமிங்கிலமானது பீலிக் கணவாய் எனப்படும் ஒருவகை மீன்களை வேட்டையாடி உண்பது வழக்கம். இந்த கணவாய் மீன்களின் ஓடுகள் அதிக கடினத்தன்மை வாய்ந்தது. இந்த ஓடுகளை மட்டும் திமிங்கிலத்தால் செரிமானம் செய்யமுடியாது. இந்த ஓடுகள் திமிங்கிலத்தில் வயிற்றில் உள்ள குடல் பகுதியில் சிக்கிக்கொள்ளும்போது குடல் பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் ஒருவகையான திரவம் சுரக்கும். இந்த திரவத்தைத்தான் சில திமிங்கிலங்கள் வாய் வழியாகவும், சிலவகையான திமிங்கிலங்கள் மலம் வெளியேற்றும் பகுதி வழியாகவும் வெளியேற்றும். ஆரம்பத்தில் சகிக்கமுடியாத நாற்றத்துடன் இருக்கும் இந்த எச்சம் நாளாக நாளாக ஒருவித இயற்கை நறுமணமுள்ளதாக மாறிவிடும்.
திமிங்கிலத்திலிருந்து வெளியேற்றப்படும் இந்த திரவம் கடலின் மேற்பரப்பில் மிதக்கும்போது சூரிய ஒளி, கடலின் உப்பு நீர் ஆகியன சேர்ந்து அம்பர் கிரீஸாக மாறுகிறது. இதனை சேகரித்து வெளிநாடுகளுக்கு கடத்தி பெரும் பணம் சம்பாதிக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். ” என்றார்.
அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் பேசினோம். “இந்த அம்பர் கிரீஸ் எத்தனை பழையதோ அதற்கு தகுந்தாற்போய் விலைபோகும். தற்போது சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ அம்பர் கிரிஸ் ஒரு கோடி ரூபாய் என விலைபோகிறது. இந்த அம்பர் கிரீஸ் வெள்ளை, கருப்பு, சாம்பல் என்ற நிறங்களில் கிடைக்கிறது. இதிலும் வெள்ளை நிற அம்பர் கிரீஸ் அதிக விலையுள்ளதாக கருதப்படுகிறது.
இது நறுமணப்பொருட்கள் தயாரிக்கவும், வயாக்ரா உள்ளிட்ட பாலுணர்வை தூண்டக்கூடிய மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. குஜராத்தின் கடலோரப்பகுதிகளில் அம்பர் கிரீஸை சேகரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களை வளர்த்துவருவது குறிப்பிடத்தக்க ஒன்று.” என்றனர்.
சர்வதேச கடத்தல் பொருட்கள் பட்டியலில் அம்பர் கிரீஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளதோடு, தங்கத்தை விட அதிக விலையுள்ளதாகவும் கருதப்படுகிறதாம்.
-ஆர்.விவேக் ஆனந்தன்