நெல்லை அருகே சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற நிகழ்ச்சியில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது போலீசால் தடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக மாநிலம் முழுவவதும் சுமார் 5000 பேர்களுக்கு பவர் டிரில்லர் வழங்கப்பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 77 விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் வழங்கும் விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் விழா மலர் ஒன்றை சபாநாயகர் அப்பாவு மேடையில் வெளியிட்டுக்கொண்டிருக்கும் போது, தரையில் திடீர் பரபரப்பு. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றினார்.
தீப்பெட்டியால் தன்னை கொளுத்தி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாய் இதை கவனித்துக்கொண்டிருந்த போலீஸ்காரர் மணி வண்ணன் ஓடிப்போய் தீப்பெட்டியை தட்டி விட்டார். மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தூர வீசினார். பின்னர் அவர் மீது கேன் கேனாய் தண்ணீர் ஊற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது போலீஸ். அப்பெண் தீக்குளிக்க என்ன காரணம் என்று சப் இன்ஸ்பெக்டர் சுப்பையாவிடம் கேட்டோம்.அவர் கூறுகையில், ”அப்பெண்ணின் பெயர் வேளாங்கண்ணி(வயது 40)பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி. இவர் கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் பாலாஜிக்கு உடல்நலம் சரியில்லை, மருத்துவ செலவிற்காக லோக்கல் வி.ஐ.பி ஒருவரிடம் ஒரு 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு மாதம் மூவாயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும்.ஆனால், வேளாங்கண்ணியால் முடியவில்லை.எனவே, கந்து வட்டி வி.ஐ.பி அவருக்கு தொடர் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் கடுப்பான வேளாங்கண்ணி சபாநாயகர் நிகழ்ச்சியில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸ் காப்பாற்றி விட்டது” என்றார்.