முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பதாவது, "99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக தோல்வி அடைந்திருக்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல, முழுக்க பச்சை பொய்யை நீங்கள் கட்டவிழ்த்து விட்டு இருப்பது மக்களிடத்தில் மிகப்பெரிய ஒரு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது கர்நாடகா முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தண்ணீர் தர முடியாது என்று பகிரங்கமாக கூட்டத்தில் கூறிவிட்டனர். ஆனால் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது, குறுவை சாகுபடி எல்லாம் கருகி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் வேதனையோடு இருக்கிறார்கள், தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று கேட்க வேண்டாமா?
காவேரி பிரச்னையில் மென்மையான போக்கை நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள், காங்கிரஸுடன் ஒத்து போனால் தான் பதவியை பெற முடியும் அதற்கு கர்நாடகா காங்கிரஸ் உதவி தேவை என்று மென்மை போக்கை நீங்கள் கடைப்பிடித்து வருகிறீரகள்.
தமிழ்நாட்டின் விவசாய மக்கள் நாதியற்றவர்களா ? அனாதைகளா? உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லையே அப்படியானால் நீங்கள் ஒரு கண்டனத்தை தெரிவிக்க வேண்டாமா? தொடர்ந்து எடப்பாடியார் இது குறித்து கடுமையாக குரல் கொடுத்து வலியுறுத்தி வருகிறார்.
தொடர்ந்து காவிரி பிரச்னையில் மௌன சாமியார்களாக உள்ளீர்கள், கூட்டணி கட்சிக்காக அங்கே சென்ற நீங்கள், தமிழ்நாட்டு மக்களுடைய வேதனையை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அங்கு அந்தக் கூட்டத்தில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டாமா? கூட்டணியை வலுப்படுத்த செல்லும் நீங்கள் அங்கு பேச மறுப்பது ஏன்?" என்று பேசியுள்ளார்