நெல்லை மாவட்டம், பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் பிச்சைராஜ் (52). அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிச்சைராஜ் பேட்டை, ரூரல் துணை பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்த அனுபவம் உள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 18வது வார்டு வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது கட்சிப் பணிகள் தவிர, பேட்டையில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். கடந்த 24ம் தேதி இரவு பாரை மூடிவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறார் பிச்சைராஜ்.
அவர், பேட்டை வீரபாகு நகர் ரயில்வே பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்திருக்கிறது.
என்ன நடக்கிறது? என சுதாரிக்கும் முன்பே அந்தக் கும்பல் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக் அரிவாளால் வெட்டிவிட்டு எஸ்கேப்பானது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சட்டென பிச்சைராஜ் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள், அவரைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுக்கவே, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி மோகனிடம் பேசினோம். ‘‘பிச்சைராஜூக்கு சொந்த உறவுகளிடையே நல்ல பெயர் இல்லை. அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார்.
எனவே அவரது உறவுகளை அள்ளிக் கொண்டு வந்து விசாரித்து வருகிறோம். தவிர, அண்மையில் டாஸ்மாக் பாரில் சிலர் சண்டையிட்டு இருக்கிறார்கள். அவர்களை பிச்சைராஜ் அடித்து விரட்டியிருக்கிறார்.
அந்த டீமும் இப்போது பிடிபட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்து இருக்கிறார். இந்தப் பதவிக்காக பல லட்சங்களை அவர் செலவு செய்திருக்கிறார். இதனால் லோக்கல் அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு வருத்தம். எனவே அவர் இந்த கொலையின் பின்னணியில் இருக்கிறாரா? என விசாரித்து வருகிறோம்’ என்றார்.